21 ஜனவரி, 2012

முத்திரை வெளியீடும் முள்ளிவாய்க்கால் நினைவுகளும்

சென்றவாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு போயிருந்தேன் யாழ்ப்பாண வீட்டில பொங்கல் கொண்டாடலாம் எண்டு.. நான் ஊருக்கு போனாலே நம்ம பெரியம்மாவுக்கு சந்தோசம் களை கட்டிடும்.தன்னந்தனியாகவே வீட்டிலேயே இருப்பதால் நான் போனால் வீட்டுக்கு கூட்டிப்போய்  ஊர்ப்புதினம் எல்லாம் கேட்பா, முக்கியமா நம்ம நாட்டு அரசியலை ஒரு குடை குடைவார். அப்படித்தான் இந்தமுறையும் நான் மாட்டுப்பட்டேன்...

தம்பி பார்த்தியா பிரான்ஸ்ல பிரபாகரனோட முத்திரை வெளியிட்டிருக்காங்களாம்.லண்டனில புலி சீல் முத்திரை வெளியிட்டிருக்காங்களாம், ராஜபக்சேவுக்கு ஒரே பிறசராமே இப்போ...


இதெல்லாம் யார் பெரியம்மா சொன்னது உங்களுக்கு

உதயன் பேப்பரில போட்டிருந்தாங்க..அதோட பக்கதில பஞ்சாட்சரமும் சொன்னார் கோயில்ல எல்லாச்சனமும் கதைச்சாங்களாம் எண்டு..''

இல்லை பெரியம்மா முத்திரை விசயம் கொஞ்சம் சீரியசும் சிக்கலான விசயம்தான்..
Add caption
ஏண்டா லண்டன் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி கொடுத்திட்டாங்களாமே..அப்போ இலங்கை அரசாங்கம் ஒண்ணுமே செய்யேலாது தானே..

இல்ல பெரியம்மா அரசாங்கம் அறீவிச்சிருக்கு அந்த முத்திரை எல்லாம் ஒட்டி இலங்கைக்கு லெட்டர் போடவேண்டாம் அனுப்பினா நாங்கள் அதை கவனிக்கமாட்டோமெண்டு..

சரி அதை விடு ஏன் இப்ப முத்திரை வெளியிட்டிருக்காங்க..

Add caption
இப்போ  எல்லா நாடும் புலிகளை பயங்கரவாத பட்டியலில வைச்சிருக்கு,இப்படி ஏதாச்சும் முத்திரைகளை வெளிநாடுகளில் அனைத்து அனுமதிகளையும் எடுத்து வெளியிட்டால் அது புலிகளை  பயங்கரவாதச்சட்டத்தில இருந்து நீக்கிறதுக்கு ஒரு துருப்புச்சீட்டா பயன்படுத்தலாம் அதோட தமிழ் மக்களோட போராட்டம் நியாயமானது என்பதை உலகளாவிய ரீதியில் உணரவைக்கணும் அதுக்காகத்தான் ..  

Add caption
அப்படா இந்த முத்திரை வெளியிட்டா எப்படியும் தலைவரை வெளில கொண்டுவரலாம் எண்டு சொல்லுறாங்கள்..

சரி தலைவர் வெளில வந்து என்ன செய்யப்போறார்...
இப்ப எல்லா நாட்டில இருந்தும் வந்து புனர்வாழ்வில இருந்து வெளில வந்த இயக்க பெடியள் பெட்டையளை சந்திச்சு கதைச்சு இருக்காங்களாம்.. ஆயுதம் எல்லாம் வாங்க இப்ப காசு சேர்க்கிறாங்களாம், 

அது கோத்தபாய அவிழ்த்துவிட்ட கதை பெரியம்மம,அபப்டி சொன்னால்தானே புனர்வாழ்வில இருக்கிறவங்களை வெளில வரவிடாம தடுக்க சொன்ன கதை இது.இதெல்லாம் யார் பெரியம்மா உங்களுக்கு சொன்னது

கோயில்ல கதைச்சாங்களடா..

அப்ப கோயிலுக்கு கும்பிட போறேல்லையா பெரியம்மா,சரி ஒரு கதைக்கு கேட்கிறன், திரும்பி ஒருக்கா சண்டை தொடங்கினா நீங்க என்ன செய்வீங்க, உங்கட மகனோட பிள்ளைகளை வெளிநாட்டில இருந்து வந்து சண்டை பிடிக்க விடுவீங்களா பெரியம்மா..

டேய் என்னடா கதைக்கிறே.

பின்ன என்ன பெரியம்மா.. நீங்க ஆரம்பத்தில போராட்டுத்துக்கு ஆதரிச்சிருக்கலாம்.. ஆனா இறுதிக்கட்டத்தில வன்னிச்சனம் பட்ட துன்பத்தை போல யாருமே பட்டிருக்க ஏலாது. இனி எந்த சனமும் போராட்டத்துக்கும் ஆதரவு கொடுக்காது அந்தளவு வேதனைகளையும் சோதனைகளையும் சந்திச்சிட்டாங்க, மெனிக்பாம் முகாமில ஒரு நாள் வந்து பார்த்திருந்த தெரிஞ்சிருக்கும,அதோட யாழ்ப்பாணத்தில இருக்கிற பொடியன்கள் பெட்டையள் எல்லாம் நல்லா வசதியா வாழ பழகிட்டுதுகள்,அதுகள் எல்லாம் இனிமேல் துப்பாக்கி மட்டுமல்ல.. ஒரு சுலோக அட்டை எடுத்துக்கொண்டு கூட அமைதி போராட்டம் போராட முன் வரமாட்டாங்கல்,உங்களைப்போல பெரியவங்கதான்  போராட ரோட்டில இறங்கணும் நீங்க ரெடியா ..

டேய் பேப்பரிலயும் போட்டிருக்காங்களாம்.. திரும்ப சண்டை வரப்போகுதெண்டு.. பிரபாகரன் திரும்ப வருவார் எண்டு..


நிற்க****************


எனது பெரியம்மா மட்டுமல்ல இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் எண்ண ஓட்டங்களும் இதுதான்..

1) திரும்ப இயக்கம் வரப்போகுது சண்டை தொடங்கப்போகுது
2) தலைவர்  பிரபாகாரன் தப்பிப்போய் பாதுகாப்பா இருக்கிறார் ,நேரம் சரியா வாறப்ப தலைவர்  திரும்ப வருவார்...

முதலாவது விடயத்தை விட்டுவிடுவோம் இரண்டாவது விடயத்துக்கு வருவோம்.

1985 இல இருந்து போராட்டத்துடன் ஊறீப்போன குடும்பத்தில் நானும் பிள்ளையாக இருந்ததால் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்திச்சு...அதன்பின்பு  2006 இல் இருந்து இறுதி யுத்தம் வரை வன்னியிலேயே வாழ்ந்த போது போராட்டத்தை என் ரத்தத்தில் கரைந்து ஊறியிருந்த ஒரே காரணத்தினால் இந்த பதிவு ,பலர் சண்டைக்கு வரலாம்,பலர் திட்டலாம்,ஆனால் உண்மைகளை அவர்கள் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே என் கருத்து.

2007 ம் ஆண்டுகாலப்பகுதியில் " 300 " என்ற ஸ்பார்டர்ஸ் என்ற விடுதலை போராட்ட வீரர்கள் பற்றீய ஒருதிரைப்படம் வந்திருந்தது.அந்த படம் வன்னி மண்ணிலும் தமிழீழ திரைப்படத்துறையினரால் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டது.தமீழீழ திரைப்படத்துறையினர் எப்போதும் பெருமிதம் கொள்வது என்னவெனில் தலைவர் அவர்களை ஒரு இடத்தில் உட்கார்த்தி வைத்து தமது தமிழாக்க திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பிக்கும் வரம்தான்.2 மணித்தியாலங்கள் அமர்ந்திருந்து பார்த்துவிட்டு தனது விமர்சங்களை சொல்லிவிட்டு போவாரம் தலைவர்.அதேபோல் இந்த 300 படத்தை தலைவர் அவர்கள் பார்த்து விட்டு சொன்னார்"இந்த படத்தை வன்னியின் மூலைமுடுக்கெல்லாம் திரையிடுங்கள்,அனைத்து தமிழ் மக்களும் பார்க்கணும்,அந்த ஸ்பாக்டரன் வீரர்கள் போல எம் மக்களின் உணர்வுகளும் இறுதி வரை இருக்கவேண்டும்"

அடுத்ததாக 2009 இன் ஆரம்ப நாட்களில் போர் உச்சக்கட்டம் பெற்றிருந்தபோது  புதுக்குடியிருப்பில்  ஒரு இடத்தில்  அனைத்து தளபதிகளுடன் போர் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது தலைவர் அவர்கள் அனைத்து தளபதிகளிடம் சொன்னது ,

"நீங்கள் எல்லாரும் 300 படம் பார்த்திருப்பீங்க.. அதேபோலத்தான் நம்மோட இந்த போராட்டமும் இப்ப இருக்கு. உலக அரக்கர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறம்.எங்கட சண்டை டீமில் 50 பேர் இருந்தா அதில 30 பேர் கட்டாய ஆள்சேர்ப்பில வந்த பெடியளும் பிள்ளையுளும்.. அவங்க எப்போ வீட்டுக்கு போவம் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர முன்னால வார எதிரியை அவங்க வீட்டுக்கு அனுப்பவேணுமெண்டு நினைக்கினமில்லை. அந்த 300 படம் மாதிரி நாங்களும் சுகந்திர உணர்வுள்ள அனைவரும் இந்த போராட்டத்தோட ஒரு கட்டத்தில மக்கள் இல்லாத ஒரு இடத்தில ஒன்றூ கூடி எதிரியோட சண்டை பிடிக்கோணும்.சனத்துக்கு இழப்பு வரக்கூடாது என்ன எல்லாருக்கும் புரியுதுதானே"

ஆனால் இதனை தலைவர் இறுதி நாட்களில் செயல்படுத்துவதற்காய் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரத்திலே அனைத்து தளபதிகளுடனும் பாரிய இறுதி யுத்ததுக்காக ஒன்றுகூடியிருந்தபோது அனைத்துமே கைமீறி போனது.
அந்த இடத்தில் தலைவர் அவர்களை பாதுகாக்கவும் எதிரியை பின்நோக்கி நகர்த்தவும் அனைத்து தளபதிகளும் போராளிகளும் எதிரியுடன் முன்னரங்குநிலைகளிலேயே மூர்க்கமாக போராடினார்கள்.மூன்று தடவைக்கு மேல் பலமாக காயப்பட்டு இருந்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களையும் மற்றைய தளபதிகளையும் மீட்பதற்காய் வெளிப்பகுதியிலிருந்து பொக்ஸ் அடித்து நின்ற ராணூவத்தினர் மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரிகேடியர் தீபன் அவர்கள் சொன்னது

"நான் என்னோட இவ்வளவு போராளிகளையும் விட்டிட்டு வரமாடேன்,எனது வீரமரணம் இங்கேயே இந்த மண்ணிலேயே நிகழவேண்டும்"

அதுவே அவரின் இறுதி ஆசையாக இருந்தது.ஆனாலும் ஒரு சிறு ஒழுங்கை போன்ற பகுதியூடாக ரத்னம் மாஸ்டர் அவர்களின் கமாண்டோ போராளிகள் மூர்க்கத்தனமாக ஒரு சண்டையை பிடித்து பொக்ஸை உடைத்துக்கொண்டு தலைவரையும் அவர்களுடன் நின்ற மற்றைய போராளிகளையும்  காப்பாற்றீக்கொண்டு முள்ளீவாய்க்கால் பகுதிக்கு சென்றார்கள்.அந்த இறுதி நிமிடங்கள் நீங்க நினைத்துபார்ப்பது போல் சாதாரணமாக இல்லை..

"எல்லாரும் அடிச்சுக்கொண்டே ஓடுங்க்கோ ,நிக்காமால் ஒடுங்கோ" எண்டு கத்திகொண்டே போராளிகள்  ஒரு ஒழுங்கை போன்ற பகுதியை உருவாக்கி தாக்குதல் நடத்திக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தினம்,பெண்,ஆண் போராளிகளும் பின்னால் சுட்டுக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தபோதே ராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு சில போராளிகள் காயம்பட்டு ,வீரச்சாவடைந்து கீழே விழுந்துகொண்டிருந்தார்கள்,அவர்களை மீட்க கூட நேரமில்லாமல் போராளிகள் சுட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள், தென்னங்காணியில் நின்ற ஒவ்வொரு தென்னைக்கும் தாவி தாவி ஓடி தாக்குதலில் இருந்து தப்பி ஒடிக்கொண்டிருந்தார்கள்.அனுபமிக்க உணர்வுமிக்க தளபதிகள்,மூத்த போராளிகள் வித்தாகிவிட இறுதி நாட்களீல் 30 நாள் 20 நாள் யுத்த பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளுமே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"பிள்ளையள் நிக்காமல் ஒடுங்கோ ஒருத்தரும் நிக்கேலாது "என்று கத்திக் கொண்டிருக்கும்போதே..

"அண்ணே  காலில வெடி விழுந்திட்டு காப்பாத்துங்கோ"எண்டு கத்திக்கொண்டே ஒரு பெண்போராளி நிலத்தில் வீழ்ந்த போது கூட திரும்பி ஓடிப்போய்காப்பாத்த முடியல.

"தங்கச்சி கொஞ்சத்தூரம் ஓடி வாம்மா என்று கத்தியபோது"

உயிர் வாழவேண்டும் என்ற அந்த ஏக்கம் அந்த பெண்போராளியின் கண்களில் தெரிந்தது,ஒருமாதிரி திரும்ப எழும்பி ஓடி வந்த போது திரும்ப கழுத்தில் வெடி "அண்ணே" என்று கத்திக்கொண்டு கீழே விழுந்த போது   ரீ 56 சை ஓட்டோவில விட்டு சுட்டுக்கொண்டே ஓடிபோய் அந்த பெண்போராளியை தூக்கிகொண்டு கடற்கரை வரை நாக்கில் நுரை தள்ள ஓடிவந்து சேர்ந்த ஒவ்வொரு போராளியின் வேதனைகளும் சோதனைகளும் எனது பெரியம்மா போல கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த தமிழருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அந்த கழுத்தில் வெடி வாங்கிய பெண் இன்றூ கழுத்திலேயே அந்த ரவுண்ட்ஸ் ஜ ஆப்பிரேசன் பண்ணீ வெளியில் எடுக்க முடியாமல் இன்றும் அந்த ரவுண்ட்ஸ் உடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது என் கண்முன்னே நின்ற ஒரு விம்பம் மட்டுமே..

இறுதி நாட்கள் நெருங்கியபோது தலைவர் மீதமாக இருந்த தளபதிகளிடம் சொன்ன வார்த்தைகள்

"சனம் பிரபாகரன் இருக்கிறார் இயக்கம் இருக்கு சண்டை பிடிச்சு காப்பாத்தும் எண்டு இண்டைக்கு வரைக்கும் எங்களுக்கு பின்னால வந்திட்டு எல்லா கஸ்டத்தையும் தாங்கிக்கொண்டு,ஆனா யாருமே அதே உணர்வோட போராட வரேல்லை..,இண்டைக்கு நாங்கள் உலகநாடுகளுக்கெதிராக சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறம். ஆனால் முடிவு எனக்கு தெரியுது.அதனால இறுதிவரைக்கும் நான் இந்த மண்ணை விட்டு தப்பி போகப்போறதில்லை. என்னோட கடைசி நிமிடம் வரை இந்த மண்ணிலேயே இருக்கணும். என்னோட பிஸ்டலோட கடைசி ரவுண்ட்ஸ் இருக்கும்வரை நான் எதிரியோட சண்டை பிடிக்கவேணும் யார் என்ன சொன்னாலும்.என்னோட வீரச்சாவு இந்த மண்ணிலேயே நிகழ வேணும்.இவ்வளவு மக்களையும் போராளீகளையும் போராட்டத்துக்காக இழந்திட்டு நான் மட்டும் தப்பி ஓட விரும்பேல்ல.. எனக்காக துர்க்கா,விதுஷா,தீபன் கடாபி ஆயிரமாயிரம் போராளிகள் கடைசிவரை சண்டை போட்டது கண்ணுக்குள்ள இப்பவும் இருக்கு..எனது வீரமரணம் உலக்குக்கே தெரியவேணும்.அப்போதான் இனிமேலும் பிரபாகரன் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் எண்டு தமிழ்ச்சனம் இருக்கமாட்டினம், இனிமேல் தமிழ் மக்கள்தான் போராட்டத்தை தங்களோட கையில எடுக்கவேணும். அதுக்காக நான் சண்டை போட்டு செத்திட்டாலும் என்னோட பொடியை எல்லாச்சனமும் பார்க்கவேணும். 1987  இல தம்பி தமிழீழத்தை கைவிட்டு வேற எதையெண்டாலும் இந்திய திம்பு பேச்சு வார்த்தையில வாங்கிட்டு வந்தாலும் நானே அவனை சுடுவேன் எண்டு சொன்னவர் கிட்டு.. அவரோட அந்த சொல்லை பொய்யாக்க நான் விரும்பேல்ல,எங்கட இயக்கத்தை ஒரு கொள்கையோட வளர்த்தனான்.அந்த கொள்கையை நானே பொய்யாக்க விரும்பேல்ல..எங்கட இயக்க கொள்கையை நான் கடுமையா கடைப்பிடிப்பேன். தயவு செய்து என்னோட கடைசி ஆசையை தட்டிக்கழிக்காதீங்க "

இது அவர் உறுதியுடனும் கண்களில் தமிழீழக்கனவுகளுடனும் சொன்னது.அவர் என்ன சொல்லி இயக்கத்தை கட்டுக்கோப்பாகா வளர்த்தாரோ அதன்படியே அவரும் ஒழுகி எம் தாயகமண்ணீலேயே வீரவித்தாகினார்.

ஆனாலும் இது தெரிந்துகொண்டும் இன்றும் நெடுமாறன்,வைகோ அய்யாவிலிருந்து உலக நாடுகளில் உள்ள புலிகள் சார்ந்த அமைப்புக்கள் தலைவர் அவர்கள் இறுதிக்கட்டத்தில் தாக்குதல் நடத்தி தப்பி ஓடி வாழ்ந்து வருகிறார் என்று ஒரு மாவீரரை ,அவரின் கொள்கையை, விடுதலைப் போராட்டத்தின் கொள்கைகளை சேறு பூசி வருகின்றனர்.

அவர் வீரவித்தாகிவிட்டார் என்று சொல்லிவிட்டு அவருடன் வித்தாகிப்போன அந்த இருபதினாயிரம் மாவீரர்களின் கனவை நனவாக்க நாம் உழைக்கவேண்டும் என எல்லோரும் ஒன்றாக நினைக்கவேயில்லை.
 இனிமேலும் தலைவர் அவர்களை கேவலப்படுத்தி அவர்கள் அரசியல் நடத்துபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.அனைத்துமக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.இனிமேல் தமிழர்களின் எதிர்காலம் எங்களின் ஒன்றுபட்ட கைகளில் தான் இருக்கென்று உரத்து சொல்லவேண்டும்.இன்று உலக நாடுகளின் கொள்கை வரைபுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.எமது போராட்டம் நியாயமானது என்றூ சிறுக சிறுக தெரிய வந்துகொண்டிருக்கின்றன.அதனை அப்படியே விட்டு விடாமல் அனைவரும் கரம் கோர்த்து எமது திசையிலேயே இழுத்து வரவேண்டும் அதற்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். அதைவிடுத்து மீண்டும் ஆயுதம் தாங்கி போராடுவோம்  என்று வீண் கூச்சல் போடாதீர்கள்.இன்றூம் அவரின் பெயரில் இயக்கம் நடத்தவும் காசு சேர்க்கவும் பயன்படுத்தவது எந்தளவில் நியாயம் ? மக்களின் பொறுப்பை அவர்களின் கைக்களில் கொடுக்கவேண்டும், இல்லாவிடில் 2020 இல் கூட தலைவர் திரும்ப வருவார் எண்டு கதை அளந்துவிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஏனேனில் இனிமேல் ஆயுதபோராட்டம் என்று ஒன்று வந்தால்

1) போராட்டத்தால் பாதிப்புற்ற மக்கள் மத்தியில் எதிர்ப்பே மிஞ்சும்.

2) உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற உணர்வு  மங்கியிருக்கும் இந்த காலத்தில் மீண்டும் போராட ஆள் சேர்த்தால் அது மற்றைய ஆயுதகுழுக்களைப்போல்தான் போய் முடியும்.

3) விடுதலைபோராட்டம் பற்றீய உணர்வுள்ள தலைமுறை இன்று குடும்பம்,பிள்ளைகள் என்று செட்டிலாகிவிட்ட நிலையில் மீண்டும் சிந்திக்கவே மாட்டார்கள்.

இவையெல்லாத்தையும் விட முக்கியமான கேள்வி..
பலர் சொல்வது போல ஒரு வேளை தலைவர் அவர்கள் திரும்பி வந்தால் அவரிடம் மக்கள் முன்பு வைத்திருந்த பாசம்,அன்பு,உரிமை இருக்காது.. உங்களை நம்பி வந்த எம்மை ஏன் விட்டு போனீர்கள் என்ற கேள்வி கணைக்களுடன் தான் மக்கள் காத்திருப்பார்கள் ???????????????????????????????????
08 ஜனவரி, 2012

புதுக்குடியிருப்பில் எம்மவர்களின் உள்ளூர் தயாரிப்புகள்

 இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான தகவல்களை பெற புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்தபோது இராணுவத்தளபதியின் அனுமதி பெற்று கொண்டு தேசியத்தலைவர் அவர்களின் நிலக்கீழ் இருப்பிடங்களுக்கும் உள்ளூரில் நம்மவர்களால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பாதுக்காக்கப்பட்டுவரும் தளத்துக்கும் சென்று வந்தேன்.. கண்ணீரைக்கூட வெளியிடமுடியாமல்

01 ஜனவரி, 2012

புது வருட நல்வாழ்த்துக்கள் 2012

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,எவற்றையெல்லாம் சென்ற வருடம் செய்ய நினைத்து எம்மால் முடியாமல் போனதோ அவற்றை இந்த வருடம் செய்ய முயற்சிப்போம். மன்னிப்பை எம் எதிரிகளுக்கு ஒரு தடவை கொடுத்துபார்ப்பொம்  துரோகிகளை மட்டும் தூரமாய் தள்ளீ வைப்போம்