24 ஜூலை, 2011

"கேடி பிறந்தர்ஸ்" என்ற பெயரில் மாறன் சகோதர்கள் பற்றி புத்தகம் வெளியீடு

கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

அதில் கலாநிதிமாறன்- தயாநிதி மாறன் (கே.டி) ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளில் மிரட்டல் மற்றும் அரசியல் செல்வாக்கை வைத்து எப்படியெல்லாம் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்ற பத்திரிகையாளர் கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சிறிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பராக விளங்கி தியாகராஜ செட்டியாரின் பேரன் ஆவார்.

வர்த்தகத்தில் தங்களுக்கு எதிரானவர்களை பணிய வைக்கவும், தொழிலில் இருந்து விரட்டவும், சன் டிவிக்கு அடங்கி கட்டணம் செலுத்தவும் சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்தார்கள் என்ற விவரத்தை புத்தகத்தை எழுதியவர் தகவல் அறியும் (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக திரட்டியுள்ளார்.

செல்போன் நிறுவனங்களுக்கு மட்டுமே பூமிக்கு அடியில் ஆப்டிகல் பைர்கேபிள் பதிக்க அனுமதி இருந்த போதிலும் சட்ட விரோதமாக தங்களது செயற்கைகோள் டிவி சேனலுக்காக ஆப்டிக்கல் பைர் கேபிளை எப்படி பதித்தார்கள் என்பதில் தொடங்கி அவர்களது முறைகேடுகள் அடுக்கடுக்காக விவரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான கேபிள் டிவி கார்ப்பரேஷன் கூட ரெயில்வேயின் பைபர் கேபிளை பயன்படுத்துவதற்காக ரெயில்வே அமைச்சகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வாடகை செலுத்த வேண்டும். ஆனால் மாறன் சகோதரர்கள் சட்டவிரோதமான இந்த செயலுக்காக ஒரு நயா பைசா கூட செலவழிக்கவில்லை என்று புத்தக ஆசிரியர் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் பரவலாக கார்ப்பரேட் அலுவலகங்களைக் கொண்ட 13 கம்பெனிகளை எப்படி பதிவு செய்து கொண்டார்கள் என்ற தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தொலைக்காட்சிக்கான சிக்னல்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய எப்.எம். வானொலி நிலையங்கள் அமைப்பதற்கான உரிமங்களை பெறவும் ஒரே நாளில் ரூ. 50 கோடி செலவழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் இதற்கு முன் நடந்தது இல்லை என்று நூலாசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். _

கருத்துகள் இல்லை: