01 ஜூன், 2011

தோல்விக்குக் காரணம் தி.மு.க. நிர்வாகி வேட்டி கிழிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கூட்டம்

டலூர் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், குறிஞ்சிப்பாடியில் கடந்த 25-ம் தேதி நடந்தது. ஆவேசமாகப் பேசிய இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் தணிகைச்செல்வம், ''கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக நம் கட்சிக்காரர்களே வேலை செய் தார்கள். அதுமட்டுமின்றி, பணம் கொடுத்தும் உதவிசெய்து, சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தார்கள். அதனால், கட்சியில் களை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மாவட்டச் செயலாளர் ஆணை இட்டால், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்!'' என்றார்.
பண்ருட்டி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சபா ராஜேந்திரன், ''அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்தான் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்தார், நிதி உதவியும் செய்துள்ளார். தி.மு.க-வுக்குத் துரோகம் செய்து விட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இந்தக் கூட்டத்துக்கு வந்து பல்லைக் காட்டிக்கொண்டு முன் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறார். இதுபோன்ற துரோகிகளை உடனடியாகக் களை எடுக்க வேண்டும்!'' என்று சீறினார்.
இதைக்கேட்ட தொண்டர்கள் கடும் ஆத்திரத்துடன், 'அந்தக் கருங்காலியை வெளியே அனுப்புங்கள், அடித்தே கொல் கிறோம்’ என்று பாய... நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கடும் ரகளைகளுக்கு இடையே மைக் பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ''மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை, வெட்கமாக இருக்கிறது. தலைகுனிய வைத்து விட்டனர், தமிழக மக்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சியாக உட்காரும்போது என் உடம்பே கூனிக்குறுகுகிறது. மீண்டும் மக்களை சந்திப்போம்... வெற்றி பெறுவோம்!'' என்று அழாத குறையாகப் பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்.
பன்னீர் செல்வத்துடன் வெளியேறிய வெங்கட்ராமனுக்கு சரமாரியாக அடி. அவரது சட்டை, வேஷ்டியைக் கிழித்து எறியவே, ஜட்டியோடு கிடந்த வெங்கட்ராமனை, பன்னீர் செல்வம் காப்பாற்ற முயற்சி செய்தார். உடனே தொண்டர்களின் கோபம் அவர் மீது பாய்ந்தது. அதனால் பன்னீர்செல்வத்தை எதிர்த்தும் கோஷம் போட்டார்கள்.
ஆவேசமாக நின்ற தொண்டர்களிடம் பேசினோம். ''தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு வெங்கட் ராமன் பணம் கொடுத்து உள்ளார். இருவரையும் சந்திக்க வைத்ததே பண்ருட்டி டாக்டர் ஒருவராம். இருவரும் ஒன்றாக இருப்பதை பா.ம.க-வில் உள்ள ஒரு முக்கியப் பிரமுகர் பார்த்துள்ளார். தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று சொன்னதற்கு சி.டி. ஆதாரம் இருக்கிறது. வெங்கட் ராமன், பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இந்த உள்குத்து பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்!'' என்றார்கள்.
நடந்த சம்பவம் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் விசாரித்தபோது, ''செயல் வீரர்கள் கூட்டத்தில் எந்த மோதலும் நடக்கவே இல்லையே'' என்றார். வெங்கட்ராமனிடம் கேட்டபோது, ''என் மீது பொய்யான புகார் சொல்கிறார்கள். இதில் உண்மை இருந்தால் என் மீது கட்சி நடவ டிக்கை எடுக்காமல் இருக்குமா? சி.டி. பற்றி சொல் வது எல்லாம் கட்சிக்குள் இருக்கும் எனக்குப் பிடிக்காதவர்கள் செய்யும் வேலைதான் இது!'' என்கிறார்.

நன்றி:ஜீனியர்விகடன்

கருத்துகள் இல்லை: