22 பிப்ரவரி, 2011

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்



பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது. சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது.

அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி செய்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று வலி பற்றி குறிப்பிட்டு கொண்டிருந்தார். பேஸ்புக் பயனாளிகள் தங்கள் மன உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் இப்படி செய்திகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம்.

சிலர் தாங்கள் பார்த்த புதிய படங்களை பற்றி கூறலாம். சிலர் காலை செய்தி பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எதனையும் பேஸ்புக்கில் தெரிவிக்கலாம். பீட்டரும் இப்படி தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

பீட்டரின் நல்ல நேரம் அவரது பழைய நண்பர் ஒருவர் தற்போது மருத்துவராக இருப்பவர் இந்த செய்தியை படித்து பார்த்தார். மற்றவர்களுக்கு பீட்டர் ஏதோ புலம்புகிறார் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் மருத்துவரான ராகுல் வெலிநேனி இந்த குறிப்பை பார்த்துமே இவை அபன்டிசைட்ஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார்.

எனவே உடனடியாக பீட்டரின் பேஸ்புக் செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு செய்தியை அனுப்பி வைத்து உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் எழுதியிருந்தார். இருவரும் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் பீட்டரின் தொலைபேசி எண்ணோ, முகவரியோ மருத்துவரிடம் இல்லை. எனவே தனது மருத்துவமனையை குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்திருந்தார்.

பீட்டர் வேறு ஒரு பகுதியில் இருந்ததால் உடனடியாக அந்த மருத்துவமனிக்கு செல்லும் சாத்தியம் இருக்கவில்லை. இருப்பினும் மருத்துவ நண்பரின் எச்சரிக்கையின் தன்மையை புரிந்து கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கே பீட்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அபண்டிசைட்ஸ் நோயல் பாதிக்கப்படிருப்பதை கண்டு கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்து பீட்டர் கண்விழித்ததும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் பேஸ்புக் மூலம் உயிர் காத்த நண்பா என நெகிழ்ந்து போனார்.

டாக்டர் ராகுலோ தன் பங்கிற்கு பிரிந்த பழைய நண்பரை மீண்டும் சந்திக்க இது சுவாரஸ்யமான வழி தான் என்று கூறியுள்ளார். சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கால் சாத்தியமாக கூடிய மாயங்களில் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை: