30 மே, 2011

2ஜி ஊழல்: சிறையில் அடைக்கப்படுகிறார் கரீம் மொரானி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியுக் பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் கரீம் மொரானியின் முன் ஜாமீன் மனுவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படவுள்ளார்.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ரூ.200 கோடி தொகை, டிபி ரியால்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்வதற்கு மொரானி வழிவகுத்தாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.சிங் வாதிட்டார்.


இந்த பணப் பரிமாற்றத்துக்காக, சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கரீம் மொரானி ரூ.6 கோடி பெற்றுக் கொண்டதாக சிபிஐ தரப்பு குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில், மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: