23 மே, 2011

புத்தம் புதியதோர் இராம கதை.....!

முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும்
முழுமையாய்க் கிடைக்கப் பெற்று
ஒப்பரும் பதவியைத் துறந்து
ஓதரும் கலைஞர் சென்றார்

கட்டிய காவியோடு அன்னார்
கால்நடை ஆகச் செல்ல
கனிமொழி கண்ணீர் சிந்தி
கதாநாயகன் பின்னே செல்ல
சண்டையிட்ட மைந்தர்களும்
சரிவரப் பின்னே செல்ல
உற்ற நல் மனைவி மாரும்
உளம் நொந்து வழி அனுப்ப
காவியம் பாடிய கவிஞர் எல்லாம்
கண்ணீர் சொரிந்து நிற்க
சோனியா அம்மையாரும் இதை
சோர்வுற்று பார்த்து நிற்க
புத்தம் புதியதோர் இராமகாதை
புவி மீது அரங்கேறிற்றன்றோ?

இப்படித் தீர்ப்பை மக்கள்
இணைத் தொன்றாய் அளிப்பாரென்று
கற்பனைக் கனவில் கூட
கண்டிரார் கலைஞர் அன்றோ?
விதி இது இதனை வெல்ல
வேறெந்த வழியுமில்லை யென்று
அன்பழகனாரும் ஆசிகள் கூறிச் செல்ல
விடுதலைச் சிறுத்தைகளும் கூடி
விரைந்திவர் பின்னே செல்ல
பாட்டாளி மக்கள் கட்சி
பரிதவித்து தவறி ஏங்க
காவிய நாயகன் கலைஞரின்
காப்பியம் முடிந்ததன்றோ?
வெற்றிப் புயலில் சிக்கி
வென்ற வீர அம்மை கேள்மின்!
உண்மையில் இக்காதை உமக்கு
உவப்பான பாடம் சொல்லும்
எதிர்ப் புறத்து வீற்றிருந்த வண்ணம்
எதை எதையோ பேசி விட்டீர்
ஆட்சியை கையில் தாரும்
அசத்தியே காட்டுவேன் நான்
பசிப்பிணி பஞ்சம் நோய்கள்
பாழ்பட்ட வறுமை இனி இங்கில்லை
இலஞ்சமும் ஊழலும் இனி இல்லையென
உரத்து நீர் உறுதி சொன்னீர்
ஈழத்தீர் அஞ்ச வேண்டாம்
இடரினி உமக்கு இல்லை
அற்புத அமைதி பூக்குமிங்கு
ஆட்சியார் அனைத்தும் தந்து
வன்செயல் அற்ற நாடாய்
வான் புகழ் ஈழம் காண்பீர்
இப்படிப் பேசிப் பேசி நீரும்
இணையிலா வெற்றி பெற்றீர்
அண்மையில் கதையை மாற்றி
மாநில அரசால் எதுவுமாகாது
மத்திய அரசே இதனை நன்கு
மனதினில் கொள்ள வேண்டும்
இப்படிக் கதையை மாற்றி
இனிமையாய் பேசி விட்டீர்
கெட்டிக்காரன் புழுகு எல்லாம்
எட்டு நாளில் கலைந்தே போகும்
அம்மையே மண் குதிரையாக
ஆற்றினில் கரைந்து போகாதீர்
உண்மையில் தேர்தல் பேச்சு
உருப்படி ஆவதில்லை
நிலமகள் தென்றல் வானம்
நீள் புவி உமது பேச்சை
கேட்டது இதனை நீரும்
மறந்திட முடியுமோ சொல்
ஆதலால் குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு என்று
நம்மவர் எண்ணும் வண்ணம்
நடந்திடில் நீதி கொல்லும்.

நன்றி விகடகவி

1 கருத்து:

தனிமரம் சொன்னது…

நானும் ராமாயனம் என்று வந்தால் நீங்கள் நல்ல நடிகரை பாடுகிறீர்கள் ஒப்பீட்டுக்கு ராமன் என்ற நல்லவனை தறிகெட்ட அரசியல் வாதிக்கு உவமை அளிப்பது பிடிக்கவில்லை எனக்கு!