புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை இராணுவ அதிகாரியொருவர் ஏற்றுக் கொள்ளும் ஒளிக்காட்சிகளை அல் ஜெசீரா வெளியிட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஐ.நா. நிபுணர் குழுவினர் மருத்துவமனைகள் மீது இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆயினும் பாதுகாப்புத் தரப்பு அதனை வன்மையாக மறுத்திருந்ததுடன், அவ்வாறு எந்தவொரு மருத்துவமனை மீதும் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என்று பதில் அறிக்கை விட்டிருந்தது. பல ஊடகங்களின் நோ்காணல்களின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அதனை வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் சேதங்களைப் பார்வையிடும் அல்ஜெசீரா ஊடகவியலாளாரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் இராணுவ அதிகாரியொருவர் அந்த சேதங்கள் ஷெல் தாக்குதலின் காரணமாக நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றார்.
அத்துடன் இறந்த பெண் போராளிகளின் சடலங்களை இராணுவத்தினர் சப்பாத்துக்காலால் உதைக்கும் காட்சிகளும் இந்த ஒளிப்பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரஸ்தாப ஒளிநாடாக்கள் இலங்கையில் செயற்பட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரால் முன்னமே அல் ஜெசீராவுக்கு வழங்கப்பட்டவையாகும். அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார் என அறிய முடிகின்றது.
அத்துடன் சிவில் இலக்குகள் மீது விமானப்படையினர் குண்டு வீசியதை ஒளிப்பதிவு செய்துள்ள விமான ஒளிப்பதிவுக் காட்சிகளும் அல்ஜெசீரா ஒளிநாடாவில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல பொது மக்களும் இதில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக