18 ஏப்ரல், 2011

சற்று முன் தங்கபாலு கைது செய்யப்பட்டார்


தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கைது செய்யப்பட்டார்.

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தடையை மீறி பேரணி நடத்தியதால், காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பட்டம் நடத்திய தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால், தங்கள் போராட்டம் தொடரும் என்று தங்கபாலு எச்சரித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர் கரை திரும்பாத நிலையில், அவர்கள் உடல்கள் கடுமையாக தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டு தமிழக கடலோரங்களில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கண்மூடித்தனமாக, காட்டு மிராண்டித்தனமாக நடைபெற்றுள்ள சிங்கள படையினரின் கொடூரம் தாங்கொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து சிங்கள படையினரின் கொடுமை தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெறுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை சந்தித்து பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

தமிழக அரசும், குறிப்பாக முதல்வர் கருணாநிதியும், நமது தோழமை கட்சியினரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு துணை நின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பல்வேறு நேரங்களில் தொடர்ந்து சிங்கள அரசோடு இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பல்வேறு நேரங்களில் தொடர்ந்து உறுதி அளித்தும், தொடர்ச்சியாக சிங்கள படையினரின் வெறியாட்டம் நின்ற பாடில்லை. 4 மீனவர்கள் கொடூர கொலை, அவர்களது உடல் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய நிலை தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில், ஏன் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆற்றொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு படைகளால் நடத்தப்படும் கொலை, குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசின் கபட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் ஒரே ஒரு தமிழக மீனவர் கூட துன்புறுத்தலுக்கு ஆட்படுத்தப்படக்கூடாது, இலங்கை அரசுப் படைகளின் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்," என்று தங்கபாலு கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: