09 மார்ச், 2011

ராச(சா) துரோகம்

இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் தோல்வி அடை​வதன்
பின்னணியில், சீனா, பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவன சதி வேலைகள் இருக்​குமா? ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய விருந்​தினராகத் தங்கியிருக்கும் தலாய் லாமாவுக்கும், இந்திய பிரதமர் அலுவல​கத்துக்கும் இடையே நடக்கும் பேச்சுகள், கடித விவரங்களை அறிய சீனா ரகசிய வேலை​களில் ஈடுபடுகிறதா?
center;">
இப்படியெல்லாம் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சந்தேகப் படுகிறார்கள். ஏனென்றால், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை​வரிசை என்ற போர்வையில் அந்நிய நாட்டு உளவு சக்திகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதுதான்!

''எடிஸாலட் டெலிகாம் நிறுவனம் துபா​யில் இருக்கிறது. அதற்கும் பாகிஸ்தான் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்துக்கும் வியாபாரத் தொடர்புகள் உண்டு. இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்வது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம்தான். அதேபோல், டெலிநார் என்கிற இன்னொரு வெளிநாட்டு நிறு​வனமும், சீன உளவுத்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் வந்தபோது, இந்திய கம்பெனிகளை கேடயமாகப் பயன்படுத்தி, உள்ளே நுழைந்துவிட்டன.


இந்தியப் பாதுகாப்புக்கு சவால்விடும் இதுபோன்ற அந்நிய சக்திகளை ஆ.ராசா எப்படி ஊடுருவ அனுமதித்தார்? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்தச் செயலை மும்பைத் தொழில் அதிபர் ஷாகித் பால்வாவே முன்னின்று செய்து இருக்கிறார்!'’ என்பதுதான் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.

இதற்கு ஆதாரமாக மார்ச் 3-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஓர் கடிதத்தைத் தாக்கல் செய்தார் சுவாமி. உள்துறை அமைச்சகத்தில் இருந்து நிதித் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்ட ஷாக் கடிதம் அது!

உள்துறை அமைச்சராக சிவராஜ் பாட்டீல் இருந்தபோது உள்துறையில் இருந்து, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலுவல​கத்துக்கு போன கடிதம் அது. அதில், 'துபாயைச் சேர்ந்த எடிஸாலட் டெலிகாம் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவ​னத்தில் நேரடி முதலீடு செய்வதால், நமது தேசப் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படலாம்’ என்று சுட்டிக்காட்டி உள்ளது. இதனை தொலைத்தொடர்புத் துறையின் கவனத்துக்கு நிதி அமைச்சகம் உரிய நேரத்தில் கொண்டுசென்றதா? என்று தெரியவில்லை! ஆ.ராசாவும் இது விஷயமாக மற்ற இரு துறைகளிடம் கருத்துக் கேட்டிருக்கவேண்டும். ஆனால், கேட்கவில் லை. இந்த நிலையில்தான் டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 சர்க்கிள்​களுக்கு செல்போன் சேவை நடத்த அந்த வெளிநாட்டு கம்பெனிக்கு உரிமங்கள் வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தை சுவாமி எப்படியோ கைப்பற்றி, தனது தரப்பு வாதத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

''அந்த கம்பெனிகளுடன் தொடர்​பில் இருந்த ஆ.ராசா மீதும், அவருடன் தொடர்பில் இருந்த வேறு சில அரசியல் பிரமுகர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும்'' என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சுவாமி.

இது தொடர்பாக, விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி, கோர்ட்டில் பதில் மனுவைத் தாக்கல் செய்யச் சொல்லி இருக்​கிறார்கள். அதனால், ''இனி நடக்கப்​போவதை மார்ச் 15-ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்..!'' என்று டெல்லியில் அதிகாரிகள் சிலர் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.

இது குறித்து நாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டோம்.

''குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பலன்பூர் என்கிற ஊரில் ஷாகித் பால்வாவுக்கு ரகசிய விமானதளம் உள்ளது. அங்கே இருந்து, அடிக்கடி துபாய்க்கு சென்று வந்திருக்கிறார். சட்ட விரோதமான முறையில் பால்வா ஒரு விமானதளம் நடத்தி வந்ததை விசாரிக்க வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். இந்திய உள்துறை அமைச்சகம் சந்தேகங்கள் எழுப்பிய கடிதத்தை ஆ.ராசா புறக்கணித்துவிட்டு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை அவசரமாக வழங்கியது ஏன் என்ற கேள்வி இந்தியாவின் இறையாண்மைக்கு முக்கிய​மானது.

மும்பையில் இருந்து அடிக்கடி குஜராத் வரும் பால்வா, தனி விமானம் மூலம் துபாய்க்கு சென்று தாவூத் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட சில இடங்​களுக்கு சென்று வந்துள்ளார் என்பதே என் சந்தேகம். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 2ஜி அலைவரிசை உரிமங்களை 4,500 கோடிக்கு எடிஸாலட் டெலிகாம் நிறுவனம் வாங்கிக்கொள்வது தொடர்பான பணப் பரிமாற்றங்​களுக்காகவும், பால்வா துபாய்க்கு ரகசியமாகப் போய் வந்திருக்கிறார். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்!'' என்கிறார் சுவாமி.

இந்த விவகாரம் இப்போது புயல் கிளப்பி வருவதால், 'எதுவுமே வேண்டாம்... நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம்' என்று எடிஸாலட் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் சுழலில் இருந்து மீள வழி தேடி, இந்திய அரசியல் வி.ஐ.பி-கள் மூலம் லாபி செய்துவருகிறது.

ராசா மீதான வழக்கை இறுக்க இந்த ஆதாரம் அதிகம் பயன்படும் என்கிறார்கள்! இத்தனைக்கும் நடுவே டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையிலிருந்தே அவசரமாக ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாராம் ஷாகித் பால்வா. இது ராஜ துரோக வழக்கிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவா... அல்லது, கம்பெனியைக் காப்பாற்றவா?

நன்றி

ஜீனியர் விகடன்..

கருத்துகள் இல்லை: