28 மார்ச், 2011

பூகம்பங்கள் பற்றி எதிர்வுகூறும் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் பூகம்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் அடுத்த பாரிய பூகம்பம் தொடர்பாக எதிர்வுகூறும் சாத்தியத்தைக் கொண்டுள்ளனர்.

பூமியின் தட்டுக்களின் வடிவங்கள் மாறுதலடையும் முக்கியமான தொடர்புகள் குறித்து அவர்களால் கண்டறியக் கூடியதாக இருந்துள்ளது. அதன் மூலம் பாரிய பூகம்பங்கள் சில இடம்பெற்றவை பற்றியும் அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.நியூஸிலாந்தில் கிறிஸ் சேர்ச்சில் அண்மையில் இடம்பெற்ற 6.3 மக்னிரியூட் அலகுடைய பூகம்பம் தொடர்பாக அவர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.

"எமது ஆய்வின் பிரகாரம் பூமியதிர்ச்சி அங்கு இடம்பெறும் என நாங்கள் எதிர்வு கூறியிருந்தோம். பெப்ரவரி 22 இல் அது இடம்பெறுமெனத் தெரிவித்திருந்தோம். அது ஏற்பட்டுள்ளது. என்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அத்துல சேனாரத்ன கூறியுள்ளார். மார்ச் மாதம் இடம்பெறுமென நாங்கள் எதிர்வு கூறியிருந்த ஒவ்வொரு பூகம்பங்களும் அநேகமாக இடம்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார். நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூகம்பத்துக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தமது கண்டுபிடிப்புகளைப் பல்கலைக்கழகம் சமர்ப்பித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள்,எதிர்வு கூறல்கள் பி.பி.சி.க்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் ஆனால், அதற்கு பதிலளிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரலில் எமது எதிர்வுகூறல்கள் தொடர்பாக இறுதித் தீர்மானத்தையெடுக்கும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம் பொதுமக்களுக்கு அந்தத் திட்டங்கள் தொடர்பாக வெளியிடப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

தமது கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்குப் பல்கலைக்கழகம் அறிவிக்கும். இந்த வருடம் இலங்கைக்கு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா? என்று கேட்கப்பட்டபோது, இலங்கையில் பூமியதிர்வுகள் இடம்பெறுவது மிக அபூர்வமானவையென பேராசிரியர் கூறியுள்ளார். ஆனால், இந்து சமுத்திரத்தில் பூகம்பம் இடம்பெறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் கடல்கோள் மூலம் உடனடி அச்சுறுத்தல் இருப்பது பற்றியும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் 136 இற்கும் மேற்பட்ட பூகம்பங்களை ஆய்வு செய்துள்ளனர். அவை யாவும் 6 மக்னிரியூட் அலகுக்கு அதாவது ரிச்டர் அளவீட்டில் 6 மக்னிரியூட் அலகுக்கு மேற்பட்டவையாகும். சூரிய,சந்திர கிரகணங்கள் மற்றும் சந்திரனின் நகர்வுகள் என்பவற்றுடன் பூமியதிர்வுகளுக்குள்ள தொடர்புகளை நாம் ஆராய்ந்துள்ளோம். உறுதியான தொடர்புத்தன்மையை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. பூமியின் வடிவ மாற்றங்களை ஆராயும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பூமித்தட்டுகளின் நகர்வுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னர் பூமித்தகடுகளின் வடிவ மாற்றம் பூமியதிர்வுகள் என்பவை தொடர்பாகத் துரிதமாகத் தொடர்புபடுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கிரகங்களில் வடிவ மாற்றத்துக்கிடையில் உறுதியான தொடர்புத்தன்மை தொடர்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது அவற்றுக்கும் பூகம்பத்துக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். நாங்கள் எதிர்வுகூறியவை பல உண்மையாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: