15 மார்ச், 2011

யப்பான் புக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கத்தால் ஆபத்து-வீடுகளினுள்ளே இருக்குமாறு உத்தரவு


ஃபுக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கம், ‘சட்டப்படியான அதன் பாதுகாப்பு அளவையும்’ கடந்து ஒரு கட்டத்தில் வெளியேறியதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மின் நிலையத்திலுள்ள அணு உலையொன்றின் மையப்பகுதியில் அதிகரித்துள்ள வெப்பத்தை கடல் நீரைக்கொண்டு தணிக்க அதிகாரிகள் முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.
இருந்தாலும் உலையின் பாதுகாப்புக் கவசம் மிகப் பலமாக இருப்பதால் வெடிப்பொன்று ஏற்பட்டாலும் அதனை ஈடு கொடுக்க கூடிய நிலை இருப்பதாகவும் இப்போது, உருகும் அபாயம் எதுவும் இப்போது இல்லையென்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். 
ஃபுக்குஷிமா மின்நிலையத்தின் ஆறு அணு உலைகளில் குளிரூட்டல் கட்டமைப்பு தொடர்ந்தும் செயலிழந்தே காணப்படுகின்றது.
புளூட்டோனியமும் யூரேனியமும் கொண்டுள்ள மூன்றாம் இலக்க உலையை உடனடியாக குளிர்மைப் படுத்தும் முயற்சி இது வரை தோல்வியிலேயே உள்ளது.

சுகாதாரப் பாதிப்புகள்
இதேவேளை ஃபுக்குஷிமாவை அண்டிய 20 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், கதிரியக்கக் கசிவு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்களா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். 
ஓரளவு கட்டுப்பாடான அளவுக்குள் கதிரியக்க தாக்கத்துக்கு உள்ளாகுபவர்களுக்கு முதற் கட்டமாக வாந்தி, வயிற்றோட்டம், தலைவலி காய்ச்சல் போன்ற சாதாரண நோய் அறிகுறிகளே ஏற்படும்.
ஆனால், முதற்கட்ட அறிகுறிகளுக்குப் பின்னர், சில காலம் குறிப்பிடத்தக்க நோய்கள் எதுவும் காட்டாத போதிலும் கூட பின்னர் சில வாரங்களிலேயே இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.
இதேவேளை, உயர் அளவு கொண்ட கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளாகுவோர் இந்த எல்லா அறிகுறிகளுடன் உயிரிழக்கக் கூடிய அளவுக்கு உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் சேதமடைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது.
உடலுக்குள் ஊடுறுவும் உயர் கதிரியக்கம், உடலில் இராசயன சுரப்பிக் கட்டமைப்புகளை சேதப்படுத்தி, அதன்மூலம் உடல் திசுக்களையும் பாதிக்கச் செய்யும்.
கதிரியக்கத்தின் ஊடுறுவால் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்பு என்றால் புற்றுநோய்களே.
இவ்வாறான சுகாதாரப் பாதிப்புகளை தவிர்ப்பதற்காகவே ஜப்பான், ஃபுக்குஷிமா பிராந்தியத்திலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
கதிரியக்கச் செயற்பாட்டுக்குள்ளான அயடின் மனிதர்களுக்குள் சென்று தைரொய்ட் புற்றுநோயை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு பாதகமற்ற அயடின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

‘செரினோபில்’
இதற்கிடையே, டோக்யோவுக்கு வெளியே நாரிட்டா விமானநிலையம் ஜப்பானை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களால் நிரம்பிவழிகின்றது.
ஐப்பானில் அணு உலைகள் உருகிப்போகும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியானது முதலே வரலாற்றில் 1979 இல் அமெரிக்காவில் த்ரீ மைல் ஐலண்டிலும் அதற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் உக்ரைன் செரினோபில்லிலும் ஏற்பட்ட அணு உலை விபத்துக்களே மீண்டு்ம் நினைவுக்கு வருகின்றன.
அந்த சம்பவங்களின் பின்னர் அணு உலை பாதுகாப்புகள் குறித்து கூடுதல் அக்கறைகள் செலுத்தப்பட்டன.
ஜேர்மனில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கி விட்டன.
ஐப்பான் அணு உலை சம்பவம், அணு தொடர்பான உலகத்தின் விவாதங்களை பல கோணங்களில் முடுக்கி விட்டிருக்கின்றது.
   65 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மீது நிகழ்த்தப்பட்டுள்ள 3வது அணுகுண்டுத்தாக்குதல் இதுவாகும் ஆனால் இம்முறை நாங்களே எங்கள் மீது போட்டுக்கொண்டோம் என ஹிரோஸிமா அணுகுண்டுத்தாக்குதலில் இருந்து தப்பித்து உயிர் வாழ்ந்து வரும் 82 வயதான Keijiro Matsushima  என்பவர் கருத்து தெரிவித்துள்ளதாக சி.என்.என் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: