25 மார்ச், 2011

ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படை மீது கெரில்லா தாக்குதல் - ஐந்து இராணுவ அதிகாரிகள் பலி! - வதந்தி


நேற்று இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர்அணி ஒன்றின்மீது நடாத்தப்பட்ட திடீர் கெரில்லா தாக்குதல் ஒன்றில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு:

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப் படையணியின் கோல்ப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகர

“ரோமியோ” கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகர

“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்

ஆகியோரோ கொல்லப்பட்ட உயர் அதிகாரிகள்.

அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள சங்கிலியன் படையணி இத்தகைய தாக்குதல் வருங்காலத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என மேலும் அச்செய்தி வெளிவந்துள்ளது.

ஆனாலும் இச்செய்தி இந்த அதிகாரிகளை யுத்தகுற்றத்தில் இருந்த தப்பவைக்கவே என்று பல செய்தியாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,

இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே ஹோட்டல்களல் அறை எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.

அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.

அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல்-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: