21 மார்ச், 2011
கேணல் கடாபியின் நிர்வாக கட்டிடம் ஏவுகணைத்தாக்குதலில் தரைமட்டமானது
இன்று அதிகாலை பிரிட்டன் படைகளின் ஏவுகணைத்தாக்குதலில் கேணல் கடாபியின் நிர்வாக கட்டிடம் தரைமட்டமானது.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு Tomahawk ஏவுகணையும் 300,000 ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவாகிறது..
லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் நடத்தியுள்ள தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என விமர்சித்துள்ள லிபிய தலைவர் கர்னல் கடஃபி, இந்த தீவிரவாத தாக்குதல்களை தாங்கள் முறியடிப்போம் என கூறியுள்ளார்.
அரச தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருப்பதாகவும், லிபியாவின் எண்ணெய் வளத்தை மேற்கத்தையர்கள் அபகரிப்பதை தடுக்க தாங்கள் நீண்ட போர் ஒன்றை புரிய தயாராக இருப்பதாகவும் கூறினார்.
போர் தொடுத்துள்ள அன்னிய படைகளை ஜெர்மனியின் நாசி படைகளோடு ஒப்பிட்ட அவர், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் சூளுரைத்தார்.
இதற்கிடையே அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் செலுத்தப்பட்ட 110 ஏவுகணைகளால் ஏற்பட்ட பாதிப்பை இராணுவ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பென்காசி நகரம் அருகே பிரான்ஸ் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், கிட்டதட்ட 14 உடல்கள் இராணுவ வாகனங்கள் அருகே கிடந்ததை தான் காணக்கூடியதாக இருந்ததாக ராய்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
விமான தாக்குதல்கள் தொடர்பில் லிபிய தொலைக்காட்சியில் வெளியான செய்திகளில் கிட்டதட்ட 150 பேர் காயமடைந்து, 48 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டன.
லிபியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ தலைமை அதிகாரியான அட்மிரல் மைக் முல்லன் கூறியுள்ளார்.
தலைநகர் திரிபோலி மற்றும் மிசாராடா நகரத்தில் உள்ள கிட்டதட்ட 20 வான் பாதுகாப்பு மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க மற்றும் பிரிட்டன் கடற்படைகள் ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விமானங்களும் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பி-2 வகை விமானமும் குண்டுகளை வீசி வருகிறது.
ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கத்தைய இராணுவ அதிகாரிகள் அவசரமாக ஆராயவுள்ளனர். பாதிப்பின் அடிப்படையில் எவ்வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று பிபிசியின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்தியாளர் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகின்றார்.
இதற்கிடையே, கர்னல் கடஃபிக்கு ஆதரவான படைகள் மிசராடா மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கிளர்ச்சியாளர்களின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
லிபியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அங்கு அதிகரித்து வரும் வன்முறையால் பொது மக்கள் பாதிக்கப்படுவது தமக்கு மிகுந்த கவலையை கொடுப்பதாகவும், ஆயுத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலமே க்ருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக